search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    மதுரையில் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை- 2 பேர் கைது

    கொலை வழக்கில் கைதானவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை நிலையூரில் கடந்த மாதம் நடந்த நந்தினிகுமார் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக சேது என்ற அழகுசேதுபதி, அஜய், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    ஆஸ்டின்பட்டி போலீசார் அவர்களை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர். அவர்களுடன் மற்றொரு வழக்கில் தொடர் புடைய 4 பேரும் அதே வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.

    போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு வேனில் ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த அழகு சேதுபதியின் தம்பி அழகுகோபி மற்றும் அவரது உறவினர் பிரேம்குமார், லட்சுமணன் ஆகியோர் அழகுசேதுபதி கையில் ஒரு பொட்டலத்தை கொடுத்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பொட்டலத்தை வாங்கி பார்த்தனர். அதில், போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அழகுகோபி, பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான 2 பேரையும் போலீசார் திருமங்கலம் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த போதை மாத்திரைகள் 2 பேருக்கும் எப்படி கிடைத்தது என்று தெரிய வில்லை? இது தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கைதான அழகு கோபி மதுரை நிலையூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். பிரேம்குமார் மதுரை துவரிமான் கிழக்கு தெருவைச்சேர்ந்தவர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×