search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கரன்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.3 லட்சம் மோசடி- வாலிபர் கைது

    சப்-இன்ஸ்பெக்டரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கருணா (வயது62). இவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் தென்காசி மாவட்ட போலீசில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையை சேர்ந்த கணபதி என்பவரது மனைவி சுப்புலட்சுமியிடம் வீடு ஒன்றை விலைக்கு வாங்க முடிவு செய்தேன்.

    சுப்புலட்சுமி சங்கரன் கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டை எனக்கு காண்பித்து அதன் விலை ரூ.15 லட்சம் என்று கூறி பத்திரம் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற் கொண்டார்.

    கடந்த 15.8.2017 அன்று அந்த வீட்டை பத்திர பதிவு செய்ய நான் முன் தொகையாக ரூ.3 லட்சத்தை சுப்பு லட்சுமியிடம் வழங்கினேன். ஆனால் வீட்டில் தனது பெரியம்மா 3 வருடம் வசிப்பார் எனவும், அதுவரை வீட்டை அடமானமாக என்னுடைய பெயருக்கு எழுதி தருவதாகவும் சுப்பு லட்சுமி கூறினார்.

    இதற்கு நானும் சம்மதித்தேன். சுப்புலட்சுமி போலி ஆவணங்கள் தயாரித்து எனது பெயருக்கு அந்த வீட்டை அடமானம் எழுதி கொடுத்தனர்.

    இந்நிலையில் 3 வருடங்கள் முடிந்த பிறகு நான் கேட்டதற்கு சுப்புலட்சுமி சரிவர பதில் கூறவில்லை. பணத்தையும் திருப்பி தர முடியாது என மறுத்து விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த நான் அந்த வீட்டின் சர்வே எண்ணை வைத்து விசாரித்த போது அந்த வீடு வேறு ஒருவரது பெயரில் இருப்பது தெரிய வந்தது. இதனால் சுப்புலட்சுமி என்னை ஏமாற்றி உள்ளதை அறிந்து கொண்டேன். எனவே போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணம் ரூ.3 லட்சத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுப்புலட்சுமி தனது மகன் மணிகண்டன் மற்றும் மகள் இந்துமதி ஆகியோருடன் சேர்ந்து கருணாவிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×