search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரும்பாறை அருகே வயல்களுக்கு சேலையில் வேலி கட்டியுள்ள விவசாயிகள்.
    X
    பெரும்பாறை அருகே வயல்களுக்கு சேலையில் வேலி கட்டியுள்ள விவசாயிகள்.

    விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வயல்களில் சேலைகளை வேலியாக்கிய விவசாயிகள்

    காட்டெருமைகள் முள்வேலியை உடைத்து தோட்டத்துக்குள் வருவதால், இப்பகுதி விவசாயிகள் சேலைகளை தோட்டத்தில் உள்ள முள்வேலியை சுற்றி கட்டி உள்ளனர்.
    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கீழ்பழனிமலை மேற்கு தொடர்ச்சிமலையில் ஒரு பகுதியாக உள்ளது. இந்த மலைப்பகுதியில் காபி பயிர் பிரதான தொழிலாக உள்ளது.

    காபிக்கு ஊடுபயிராக மிளகு, வாழை, அவகோடா, ஆரஞ்சு, ஏலம், எலுமிச்சை, சவ்சவ், அவரை, பீன்ஸ் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்புவரை காட்டெருமைகள் அபூர்வமாக தான் தென்படும். ஒன்று, இரண்டுதான் காணப்படும். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் காட்டெருமை தொல்லையாகதான் இருக்கிறது. அதிலும் பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, கும்பறையூர், பெரும்பாறை, மஞ்சள்பிரப்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டெருமை அட்டகாசத்தினால் பயிர்கள் நாசமாகின்றன.

    ஒவ்வொறு காட்டெருமையும் சுமார் 3 டன் வரை எடை கொண்டதாக பயங்கர தோற்றத்துடன் காணப்படுகிறது. இவை, முள்வேலிகளை எளிதில் உடைத்து விட்டு தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. சில சமயங்களில் விவசாயிகளையும் தாக்குகின்றன. இவை தோட்டங்களில் புகுந்து உருண்டு, புரளும் போது அவற்றின் உடலில் ஒட்டி இருக்கும் ஒட்டுண்ணிகள் உதிர்ந்து விழுகின்றன.

    இந்த ஒட்டுண்ணிகள் கடிப்பதால் விவசாயிகளின் உடலில் தழும்புகள் ஏற்படுகிறன. இந்த மலைப்பகுதியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உள்ளன. இவை முள்வேலியை உடைத்து தோட்டத்துக்குள் வருவதால், இப்பகுதி விவசாயிகள் பழைய சேலைகளை விலைக்கு வாங்கி வந்து தோட்டத்தில் உள்ள முள்வேலியை சுற்றி கட்டுகிறார்கள். பல நிறங்கள் கொண்ட சேலைகளை பார்த்து காட்டெருமைகள் அப்பகுதிக்கு வருவதில்லை.

    இதனால் மேலும் சில விவசாயிகள் முள்வேலியை சுற்றி சேலைகள் கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். எனவே காட்டெருமைகளிடம் இருந்து பயிர்களையும், விலை நிலங்களையும் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    Next Story
    ×