search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protect crops"

    தற்போது உருவாகி உள்ள பெய்ட்டி புயலில் இருந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி (கலெக்டர் பொறுப்பு) முத்துமாரி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தென்னை, மா, பலா மற்றும் பல்லாண்டு மரப்பயிர்கள் பலத்த சேதத்திற்குஉள்ளாயின. இந்த நிலையில் தற்போது உருவாகி உள்ள பெய்ட்டி புயல் தமிழகத்தின் வடக்கு கடற்கரையோர மாவட்டங்களில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு நிலையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதன் காரணமாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னை, மா, நெல், பலா உள்ளிட்ட பல்வேறு பல்லாண்டு பயிர்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்வது அவசியம்.

    7 முதல் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட அதிக மகசூல் தரும் தென்னை மரங்கள் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுவதால் இத்தகைய மரங்களை கண்டறிந்து அதில் உள்ள தேங்காய், இளநீர் மற்றும் அதிக பாரம் உள்ள தென்னை ஓலைகளையும் அகற்ற வேண்டும். இதன் மூலம் இத்தகைய மரங்களில் தலைபாரம் வெகுவாக குறைந்து புயலினை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் 4 நாட்களுக்கு தென்னந்தோப்புகளில் நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் வேர்ப்பகுதி நன்றாக இறுகி காற்றில் இருந்து சாயாமல் இருக்க வாய்ப்பு ஏற்படும். புயல் காற்று வீசும் சமயம் காற்று மரங்களின் ஊடே புகுந்து இலகுவாக செல்லும் வகையில் பக்கவாட்டு கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் நீக்கி, மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம். கிளை மற்றும் இலைகளை நீக்கிய இடங்களில் காப்பர் ஆக்சிகுளோரைடு ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் கலந்த கலவை கொண்டு பூசவேண்டும்.

    உரமிடுதல் போன்ற பணிகளை மரத்தை சுற்றி மண் அகற்றி தற்சமயம் மேற்கொள்ளாமல் புயல் கடந்தபின் மேற்கொள்வது சிறந்தது. வாழைத்தோப்பினைச்சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். வேம்பு, பூவரசு, புங்கன் போன்ற மரங்களின் கிளைகளை முழுவதும் வெட்டி குறைப்பதன் மூலம் மரங்களை புயலில் இருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு வெட்டி அகற்றிய இலைகளைக்கொண்டு பசுந்தழை உரமாக பயன்படுத்தலாம். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களை தண்ணீரை வடித்து வடிகால் வசதியை நன்றாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே தென்னை உள்ளிட்ட பல்வேறு பல்லாண்டு பயிர்களை பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது. 
    ×