search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    சட்டசபையில் 23ந்தேதி 3 தலைவர்கள் படங்கள் திறப்பு

    சட்டசபையில் 3 தலைவர்கள் திருவுருவ படங்களை வருகிற 23-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.
    சென்னை:

    நாட்டுக்காக உழைத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்ட கூட்டத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்த 3 பேர் படங்கள் திறப்பதன் மூலம் தமிழக சட்டசபையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கிறது.

    தற்போதுள்ள 12 தலைவர்களின் படங்கள் எப்போது திறக்கப்பட்டது, யாரால் திறந்து வைக்கப்பட்டது என்கிற விவரம் வருமாறு:-

    1948 ஜூலை 24-ந்தேதி தமிழக சட்டசபை மண்டபத்தில் மகாத்மா காந்தி உருவப்படம் திறக்கப்பட்டது.

    இதன்பின் அடுத்த ஒரே மாதத்தில், மூதறிஞர் ராஜாஜியின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதனை அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார்.

    இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1964-ம் ஆண்டு மார்ச் 22-ல் திருவள்ளுவரின் படத்தை குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜாகீர் உசேன் திறந்தார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் உருவப்படத்தை 1969 பிப்.10-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 5 தலைவர்களுக்கு உருவப்படங்கள் திறக்கப்பட்டன.

    முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவப்படத்தை 1977 ஆக.18-ல் அப்போதைய குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார், அம்பேத்கார், பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் உருவப்படங்கள் ஒரே நேரத்தில் 1980 ஆக.9-ல் திறக்கப்பட்டது. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் திறந்தார்.

    இதன் பிறகு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 1992 ஜன.31-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை சட்டசபையில் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கடந்த 2018 பிப்.11-ல் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து, ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 19-ல் முதல்-அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

    இப்போது வ.உ.சி., ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் திருவுருவ படங்கள் வருகிற 23-ந்தேதி, மாலை 5.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபையில் திறந்து வைக்க உள்ளார்.

    Next Story
    ×