search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும்- ராமதாஸ்

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கல்பாக்கம், மராட்டியத்தின் தாராப்பூர் ஆகிய இடங்களிலுள்ள அணுமின் நிலையங்களில், பொறியியல் பட்டயப்படிப்பு படித்தவர்களில் 50 பேருக்கும், 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. படித்தவர்களில் 110 பேருக்கும் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பின்னர் அந்த இடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என்பதால் இது பயிற்சி அறிவிப்பாக இல்லாமல், பணி நியமன அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான நிபந்தனைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் எதிராக அமைந்திருப்பதை ஏற்க முடியாது.

    பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்கள் அணு விஞ்ஞானிகளோ, அதற்கும் மேலானவர்களோ இல்லை. மாறாக, வெல்டர், பிட்டர், மெக்கானிக் போன்ற தொழில்நுட்ப பணியாளர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவது தேவையற்றது. போட்டித் தேர்வுகள் மிகவும் கடுமையாக நடத்தப்படுவதால், அதன் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தகுதியானோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பணியாளர்கள் தான் என்பதால், அந்தப் பணியிடங்கள் அனைத்தையும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்களைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை சார்ந்த இக்கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×