search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்
    X
    பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்

    சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர்... கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார்

    பொங்கல் பண்டிகையையொட்டி சிலுவம் பாளையம் பகுதியில் நடந்த கிராமிய இசை நிகழ்ச்சியினை கண்டு ரசித்த முதல்வர் அங்கு கூடியிருந்த தனது கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாளில் தனது சொந்த ஊரான சிலுவம் பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டும் சிலுவம்பாளையயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அதற்காக நேற்று காலை விமானத்தில் அவர் சேலத்திற்கு வந்தார். அவருக்கு கலெக்டர் ராமன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் மற்றும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு காரில் சென்றார்.

    அங்கு காவிரி ஆற்றங் கரையில் அமைந்துள்ள முருகன் கோவில் திடலில் நடந்த பொங்கல் விழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார். அப்போது முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழாவில் பங்கேற்ற பொது மக்களுக்கு சக்கரை பொங்கலுடன் கரும்பு, மஞ்சள் குலைகளையும் வழங்கினார். தொடர்ந்து தனது பண்ணை தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு பழம், வெல்லம், கரும்பு, தேங்காய் ஆகியவற்றை வழங்கினார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி சிலுவம் பாளையம் பகுதியில் நடந்த கிராமிய இசை நிகழ்ச்சியினை கண்டு ரசித்த முதல்வர் அங்கு கூடியிருந்த தனது கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானத்தையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஊராட்சி சப்பாணிப்பட்டி அருந்ததியர் காலனிக்கு சென்றார். அங்கு நடந்த பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டு பெண்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அப்பகுதி பெண்கள் சிலர் ஆர்வத்துடன் எடப்பாடி பழனிசாமியுடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இந்த விழாவில் முதல்- அமைச்சருடன் அவரது சகோதரர் கோவிந்தராஜூ மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். முதல்- அமைச்சர் வருகையால் அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×