search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்த காட்சி
    X
    பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்த காட்சி

    பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் - 147 இடங்களில் நடந்தது

    பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம், 147 பள்ளிகளில் நடந்தது.
    பெரம்பலூர்:

    கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பள்ளிகளை தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக அரசு பள்ளிகளை திறக்கவில்லை.

    இந்த நிலையில் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிக்கூடங்களை பொங்கல் பண்டிகை விடுமுறை கழித்து திறப்பது குறித்து அந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டங்களை அரசு நடத்தி வருகிறது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 147 பள்ளிகளில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் பள்ளிகளை திறக்கலாம், பள்ளிகள் திறக்க சம்மதம் இல்லை என்று பதிலளிக்க 2 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதனை மாணவர்களின் பெற்றோர் பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் சில பள்ளிகளில் பள்ளிகளை திறக்க எத்தனை பெற்றோர் சம்மதம் தெரிவிக்கிறீர்கள் என்றும், எத்தனை பெற்றோர் பள்ளிகள் திறக்க அனுமதிக்ககூடாது என்று கூறுகிறீர்கள், அதற்கு கை தூக்குங்கள் என்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டனர். அதற்கு பள்ளிகள் திறக்க சம்மதம் தெரிவித்து ஏராளமான பெற்றோர் கை தூக்கியதை காணமுடிந்தது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்டு, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ெலப்பைக்குடிக்காட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் பார்வையிட்டார். முன்னதாக கூட்டம் நடைபெறும் அறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. பெற்றோர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்து, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோர் வந்த பள்ளிகளில் சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் கருத்து கேட்கப்பட்டது.

    Next Story
    ×