search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்)
    X
    பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்)

    பள்ளிகள் திறப்பு எப்போது?- நாளை அறிக்கை தாக்கல்

    பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அரசுக்கு அறிக்கையாக நாளை சமர்ப்பிக்கப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 9 மாதமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்-லைன் வழியாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் படித்து வருகிறார்கள்.

    அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து விட்டதால் அனைத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அதனால் பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விருப்பத்தை கேட்டறிந்து முடிவு செய்ய அரசு திட்டமிட்டது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக 12 ஆயிரம் பள்ளிகளில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? என விருப்பத்தை கேட்டறிந்தனர். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மூலமாக கடிதம் மூலமாகவும், வாய்மொழியாகவும் விருப்பத்தை கேட்டறிந்தனர்.

    கடந்த 2 நாட்களில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் 95 சதவீதம் பெற்றோர் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன், மாணவர்கள் வகுப்புகள் நடத்தலாம், பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றி மாணவர்கள் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

    பள்ளி வளாகம், வகுப்புகளில் ஒன்று கூடி பேசுவதை தவிர்க்கவும், கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கவும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மாணவனுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து தர வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    அனைத்து மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக பெற்றோர்களின் கருத்துக்கள் பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் இன்று மாலை வரை கருத்துக்கள் பெறப்படுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து பெறப்படாத பள்ளிகளில் இருந்து மாலையில் இறுதி செய்யப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக நாளை சமர்பிக்கிறது.

    மாவட்டங்கள் வாரியாக பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருப்பதால் அதன் அடிப்படையில் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

    அதனால் இம்மாதம் 3-வது வாரத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்கிறது. இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘பள்ளிகள் திறப்பது பற்றி, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து முடிவு எடுத்து முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கும். அதன் பின்னர் பள்ளிகள் திறக்கும் தேதியை அவர் அறிவிப்பார் என்றார்.

    Next Story
    ×