search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் குழுவிற்கான கையேடுகளை அமைச்சர் தங்கமணி வழங்கிய போது எடுத்தபடம்.
    X
    மகளிர் குழுவிற்கான கையேடுகளை அமைச்சர் தங்கமணி வழங்கிய போது எடுத்தபடம்.

    பொய்யான வாக்குறுதி கொடுப்பதில் தி.மு.க.வினர் கெட்டிக்காரர்கள் - அமைச்சர் தங்கமணி பேச்சு

    தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி அளிப்பதில் தி.மு.க.வினர் கெட்டிக்காரர்கள் என்று அமைச்சர் தங்கமணி பேசினார்.
    மணப்பாறை:

    மணப்பாறையில் அ.தி.மு.க சார்பில் வாக்குசாவடி மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் பூத்கமிட்டி கையேடு வழங்கும் நிகழ்ச்சி அம்மா திடலில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை எம்.எல்.ஏ. ஆர்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மணப்பாறை ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்துறை அமைச்சரும், அ.தி.மு.க. திருச்சி தெற்கு மண்டல பொறுப்பாளருமான தங்கமணி கலந்து கொண்டு பூத் கமிட்டிக்கான மகளிர் குழுவை தொடங்கி வைத்தும், அவர்களுக்கு கையேடு வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதிலும், தொழில் நுட்பத்திலும் கெட்டிக்காரர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று விட்டார்கள். நம்பி வாக்களித்த மக்களின் நகை இன்னும் வங்கியில் அடமானத்தில் தான் உள்ளது.

    ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இது மக்களுக்கான அரசு. ஒரு கட்சித் தொண்டனும் முதல்வராக முடியும் என்பது தான் அ.தி.மு.க. ஆனால் தி.மு.க.வில் அப்படி சொல்ல முடியுமா? ஊழல், ஊழல் என்று குற்றச்சாட்டை முன்வைக்கும் தி.மு.க. எந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றது என்பதை கூற முடியுமா?

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ஏதும் பேசாத ஆ.ராசா, அவர் மறைந்து விட்டார் என்பதற்காக, அவரை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். இதுபோன்ற விமர்சனங்களை எல்லாம் உணர்ச்சிமிக்க ஒன்றரை கோடி தொண்டர்களும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆ.ராசாவிற்கு தக்க பதிலாக தேர்தல் நேரத்தில் பலிவாங்குவதற்கு எங்கள் தொண்டர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதுபோல் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஏ.டி.பி. தொழிற்சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மகளிர் குழுவை தொடங்கிவைத்து, கையேட்டை வழங்கினார்.

    Next Story
    ×