search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 3 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

    சொகுசு கார்களை திருடிய 3 பேர் கைது- 11 வாகனங்கள் பறிமுதல்

    கோவையில் பல்வேறு மாநிலங்களில் சொகுசு கார்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்பிலான 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    போத்தனூர்:

    கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்களை திருடி வந்து உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா மேற்பார்வையில் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரடி கண்காணிப்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனுவாசலு தலைமையில் மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு மதுக்கரை அருகே அரிசிபாளையம் ஆப்பிள் கார்டன் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது அந்த காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து 6 பேர் தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை துரத்திச்சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூரை சேர்ந்த சுரேந்திரன் (வயது 23), கோவை ஈச்சனாரி குரும்பபாளையத்தை சேர்ந்த சக்தி (22), நெல்லை மாவட்டம் நான்குநேரி கல் மாணிக்கபுரத்தை சேர்ந்த விஜயராஜ் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல்வேறு மாநிலங்களில் செல்ப் டிரைவிங் என்ற பெயரில் கார்களை வாடகைக்கு எடுத்து, அதில் உள்ள ஜி.பி.எஸ். கருவியை துண்டித்துவிட்டு திருடி கோவை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்றதும் தெரிந்தது.

    அத்துடன் அவர்கள் வந்த காரும் திருட்டு கார் என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் அவர்கள் திருடி விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள 11 சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுந்தராபுரத்தில் ஒர்க்‌ஷாப் நடத்தி வரும் சாதிக், இம்ரான், ஓட்டல் நடத்தி வரும் தினேஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தப்பி ஓடிய 6 பேரில் 3 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. முதலில் மதுவாங்க செல்கிறோம் என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் உண்மையை கூறிவிட்டனர். திருடிய கார்களை கோவைக்கு கொண்டு வந்து பதிவு எண்ணை மாற்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்தும், அடமானம் வைத்தும் பணம் பெற்று உள்ளனர்.

    அத்துடன் கார்களில் உள்ள முக்கிய பாகங்களையும் கழற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வெளியே நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களையும் திருடி உள்ளனர். எனவே தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×