search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, தூத்துக்குடி-தென்காசியில் விடிய விடிய சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

    நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் விடிய விடிய சாரல் மழை கொட்டிதீர்த்தது. இதனால் மாநகரின் முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநகர பகுதிகளான பாளை, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் மாநகரின் முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மாநகரில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.

    அணை பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையில் நேற்று 100 அடி நீர் இருப்பு இருந்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 101.50 அடியானது.

    அப்பகுதியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 2071.88 கனஅடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. பிசான பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து 1404.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 82.20 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1066 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 25 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் விடிய, விடிய சாரல் மழை கொட்டிதீர்த்தது. மாநகர் பகுதிகளான திரேஸ்புரம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    மாவட்டத்தில் விளாத்திக்குளம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக திருச்செந்தூரில் 55 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 31 மில்லிமீட்டரும், காயல்பட்டினத்தில் 25 மில்லி மீட்டரும், மணியாச்சியில் 24 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பால பணிகள் உள்ளிட்டவை நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. கடையத்தில் உள்ள 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 72 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ராமநதியில் 66 அடியும், கருப்பாநதியில் 57.91 அடியும் நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. இன்று காலை வரை விடிய, விடிய பெய்த மழையில் அதிக பட்சமாக கடனா அணை பகுதியில் 19 மில்லி மீட்டர் பதிவானது.

    ராமநதியில் 8 மில்லி மீட்டரும், தென்காசியில் 5.40 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது.

    கொரோனா தடை காரணமாக அருவிக்கரை கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று ரசித்து விட்டு செல்கின்றனர்.

    Next Story
    ×