search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டாக்டரிடம் ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

    ஆபாச புகைப்படம் எடுத்து டாக்டரிடம் ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரும்பாவூர்:

    எர்ணாகுளம் மாவட்டம் கலமச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையில் 32 வயதானவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த மாதம் 21-ந் தேதி இரவு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், குறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு உள்ளது, வீட்டிற்கு வந்தால் அது தொடர்பாக பேசலாம் என்று அழைத்து உள்ளார்.

    நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மறுநாள் டாக்டர் அந்த நபர் தெரிவித்த முகவரிக்கு சென்றார். அங்கு 43 வயதான நபர் இருந்தார். அவரிடம் நிலம் தொடர்பாக டாக்டர் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென்று அங்கு வந்த 4 பேர் டாக்டரை சுத்தி வளைத்தனர். பின்னர் அவர்கள் கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி அவரை மிரட்டி அருகில் உள்ள அறைக்குள் அழைத்துச்சென்றனர். பின்னர் அவரை ஒரு பெண்ணுடன் நிற்க வைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்தனர்.

    பின்னர் அந்த கும்பல் அந்த புகைப்படங்களை காட்டி ரூ.5 லட்சம் தரவில்லை என்றால் இந்த புகைப்படங்களை உனது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதுடன், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டினார்கள். மறுநாள் பணத்தை தருவதாக கூறிய டாக்டர் அங்கிருந்து தப்பி வந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கலமச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் முகமது அஜ்மல் (வயது 43) மற்றும் வினீஷ், ரோஸ்வின் (23), சம்ஜாத் மற்றும் 22 வயது பெண் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரோஷ்வின், சம்ஜாத் மற்றும் 22 வயது பெண் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட முகமது அஜ்மல், வினீஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×