search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சொத்து தகராறில் மின்வாரிய ஊழியர் வீடு சூறை- 2 பேர் கைது

    ஊத்துக்கோட்டை அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மின்வாரிய ஊழியர் வீடு சூறையாடப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியவண்ணான் குப்பம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் வட மதுரையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தம்பி தமிழ்முத்து (39). இவர்களுக்கிடையே சொத்து பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தமிழ்முத்து தனது மகன் பிரசாந்த் (19), மற்றும் அவரது உறவினர்கள் ஸ்டாலின், சுப்பிரமணி, கஜேந்திரன், கீதா, ஜெபமணி, விக்னேஷ் ஆகியோர் உடன் கோஷ்டியாக சேர்ந்து திரண்டு வந்து ராஜா வீட்டுக்குள் புகுந்தனர்.

    அதன் பின்னர், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சமையல் கியாஸ் சிலிண்டரையும் திறந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில், இதற்கு பழி தீர்க்கும் வகையில் ராஜாவின் மகன் ராகுல் என்பவர் ஜெபமணியின் மகன் செல்வமணி என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பு கோஷ்டியினரும் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தம்பியான தமிழ் முத்து மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் இவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி பின்னர் பொன்னேரியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தமிழ்முத்து கோஷ்டியை சேர்ந்த ஜெபமணி, ஸ்டாலின், சுப்ரமணி, கஜேந்திரன், கீதா, விக்னேஷ்மணி, ராஜா, கல்பனா, ராகுல் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×