search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு- கே.எஸ்.அழகிரி தகவல்

    காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார். கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    மத்திய வேளாண் சட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொறுத்தப்பட்ட ஊர்வலம் காங்கிரஸ் கட்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

    இந்த ஊர்வலத்தின் மூலமாக வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுப்பு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களின் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட திட்டமிட்டிருக்கிறது.

    தமிழகத்தில் 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொறுத்தப்பட்ட ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்கிற வகையில் பரப்புரை பயணத்தை மாவட்ட காங்கிரஸ் திட்டமிட்டு நடத்தும்.

    தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாக விவசாயிகளின் எதிர்ப்புணர்ச்சியை தலைவர் ராகுல்காந்தி வெளிப்படுத்தியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    அதேபோல, தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிற விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும். தமிழகம் முழுவதும் எந்த தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×