search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைக்கண்ணு
    X
    அமைச்சர் துரைக்கண்ணு

    24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணிப்பு - அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

    தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா பாதிப்பை சரி செய்யும் சிகிச்சை நடைபெற்று வந்த வேளையில், இதய பாதிப்பு பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவருக்கு எக்மோ கருவி, செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தினரிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொலைபேசியில் பேசி, அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
    Next Story
    ×