search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நடைபெற்றதை காணலாம்
    X
    தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நடைபெற்றதை காணலாம்

    நவராத்திரி விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்வு

    நவராத்திரி விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்தது.
    தஞ்சாவூர்:

    புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்ததால் வெள்ளிக்கிழமை பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மற்ற நாட்களில் பூக்களின் விலை குறைந்து இருந்தது. இந்தநிலையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

    தொடர்ந்து 9 நாட்கள் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். கோவில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுபமுகூர்த்த நாளாகும். நவராத்திரி விழா மற்றும் சுபமுகூர்த்த விழாவையொட்டி தஞ்சையில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டில் 60 கடைகள் உள்ளன.

    இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது தினமும் 1000 டன் பூக்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்.

    தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. நேற்றுமுன்தினம் மல்லிகைப்பூ, முல்லைப்பூ கிலோ ரூ.400 வரை விற்பனையானது. ஆனால் நேற்று விலை உயர்ந்து மல்லிகைப்பூ கிலோ ரூ.750-க்கும், முல்லைப்பூ ரூ.600-க்கு விற்பனையானது. ரூ.600-க்கு விற்பனையான கனகாம்பரம் கிலோ ரூ.1,000 வரை விற்பனையானது.

    அதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. ரூ.80-க்கு விற்ற அரளிப்பூ ரூ.150-க்கும், ரூ.300-க்கு விற்பனையான ஜாதிமல்லி ரூ.500-க்கும், ரூ.30-க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. மேலும் செட்டிப்பூ, மருக்கொழுந்து, ரோஜா பூ விலையும் அதிகரித்து இருந்தது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பூக்களை வாங்கி செல்ல மக்கள் அதிகஅளவில் வந்திருந்தனர்.
    Next Story
    ×