search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முசிறி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    முசிறி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    முசிறி அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி- 17 பேர் படுகாயம்

    முசிறி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 17 பேர் படுகாயமடைந்தனர்.
    முசிறி:

    முசிறி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 17 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரன். இவர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த உறவினர் வீட்டின் துக்க நிகழ்விற்கு நேற்று காலை உறவினர்களுடன் வேனில் புறப்பட்டார். வழியில் நாமக்கல் நகரில் உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு 18 பேர் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.

    வேனை அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 35) ஓட்டினார். திருச்சி-சேலம் மெயின்ரோட்டில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேன் வந்து கொண்டிருந்தது. ஏவூர் கருப்பம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்மாற்றி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வேனில் வந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சம்பூரணம் (55) என்ற பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த துளசிமணி(40), யாழினி(16), கவுசல்யா(40), கண்ணகி (45), கனகராஜ் (50), செல்வம்(54), பாலசந்திரன்(52), ராதா (36) மற்றும் நாமக்கல் பகுதியை சேர்ந்த இளஞ்செழியன்(45), ஜீவிதா(10), ஜனனி(5), நாகம்மாள்(65), டிரைவர் யோகேஸ்வரன் (35) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சம்பூரணத்தின் உடலை முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேன் கவிழ்ந்த இடத்தின் அருகே மின்மாற்றி இருந்தது. அதிர்ஷ்டவசமாக மின்மாற்றியில் வேன் மோதவில்லை. அதில் மோதியிருந்தால் அதிக உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×