search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரையில் கொரோனா பாதிப்பு குறைகிறது

    மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த சுகாதார நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை காரணமாக, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது. பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா உச்சத்தை எட்டியது.

    இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் போக்குவரத்தும் தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் சுற்றுவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த சுகாதார நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை காரணமாக, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் நேற்று 68 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை 15,792 பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 14,655 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உள்ளது.

    மதுரை அரசு மற்றும் தனியார் கொரோனா ஆஸ்பத்திரிகளில் இப்போது 760 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவது, பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவ அதிகாரிகள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×