search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்கு

    கரூரில் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் காந்திகிராமம் சக்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 29). எம்.இ. படித்துள்ள இவர், கடந்த 2 ஆண்டுகளாக வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கரூர் மினி பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து வங்கி தேர்வு எழுதுவதற்காக படித்து வந்துள்ளார். இந்த பயிற்சி மைய இயக்குனர்கள் கரூர் வையாபுரிநகரை சேர்ந்த காட்வின், பாண்டியன் நகரை சேர்ந்த அருண்குமார் ஆகியோர் லோகநாதனிடம் ரெயில்வே துறையில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய லோகநாதன் ரூ.9 லட்சத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். சில நாட்கள் கழித்து லோகநாதனுக்கு மின்அஞ்சல் முகவரியில் பணி நியமன ஆணை வந்துள்ளது. அந்த பணி நியமன ஆணையை எடுத்து கொண்டு மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா ஹவுரா ரெயில் நிலையத்திற்கு பணியில் சேருவதற்காக லோகநாதன் சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு தான் அது பொய்யான பணி நியமன ஆணை என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கரூர் வந்த லோகநாதன் பல முறை காட்வின் மற்றும் அருண்குமாரிடம் சென்று செலுத்திய தொகையை கேட்டும் அவர்கள் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து லோகநாதன் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக காட்வின், அருண்குமார், வேதாரண்யத்தை சேர்ந்த சுரேஷ், திருச்சியை சேர்ந்த சிவா ஆகிய 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×