search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மனைவியின் காது, மூக்கு அறுத்து நகை பறிப்பு- கொள்ளையை தடுத்த முதியவர் படுகொலை

    தண்டராம்பட்டு அருகே முதியவரை கொலை செய்து அவரது மனைவியிடம் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த குங்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது80). அவரது மனைவி அலமேலு (77). இருவரும் அதே கிராமத்தில் ஏரியின் நடுவே உள்ள பாறையின் மீது குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

    மேலும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மூதாட்டி அலமேலுவின் அழுகுரல் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரது குடிசைக்குள் சென்று பார்த்தனர். அப்போது காது மற்றும் மூக்கில் ரத்த காயங்களுடன் அலமேலு காணப்பட்டார். மேலும் அவருக்கு அருகில் கணவர் ராஜி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை டி.எஸ்.பி. ரமேஷ், ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார், வாணாபுரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இரவில் ராஜி வசிக்கும் குடிசைக்கு வந்த 3 வாலிபர்கள் அலமேலுவிடம் கம்மல் மற்றும் மூக்குத்தியை கழற்றி தரும்படி கேட்டுள்ளனர்.

    அலமேலு தர மறுத்ததால் அவரது கழுத்தை துணியால் கட்டி இறுக்கியுள்ளனர். பின்னர் அவரது காது, மூக்கை அறுத்து 5 கிராம் நகையை பறித்து கொண்டனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ராஜி கொள்ளையை தடுத்து அலறி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்து பாறாங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி ராஜி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    4 நாட்களுக்கு முன்பு ராஜி ஆடுகளை விற்று வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் இந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    வாணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (20), பிரவீன்(19), சுபாஷ்(19) ஆகிய 3 பேரும் சேர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு அதனை தடுக்க வந்த முதியவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான வாலிபர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 3 பேரும் குங்கிலிநத்தம் ஏரியில் பாறையின் அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தோம். அப்போது முதியவர் ராஜி அங்குள்ள பாறையின் மீது அமர்ந்து கொண்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.

    இதனை கவனித்த நாங்கள் அவர் ஏராளமான பணம் வைத்திருப்பார் அதனை கொள்ளையடிக்க வேண்டும் என திட்டமிட்டோம்.

    அதன்படி இரவு 10 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்றோம். முதலில் நகைகளை கொடுக்க மறுத்ததால் முதியவரின் மனைவியின் காது மற்றும் மூக்கை அறுத்து பறித்து கொண்டோம்.

    பின்னர் தடுக்க வந்த ராஜி தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டோம்.

    பின்னர் வரகூர் காளியம்மன் கோவில் அருகே உள்ள ஏரியில் அமர்ந்து மீண்டும் குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரவு 11 மணியளவில் நாச்சியானந்தல் கிராமம் அருகே நாங்கள் 3 பேரும் வந்து கொண்டிருந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசாரிடம் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×