search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்

    தேர்தலுக்கு முன்னதாக ரஜினிகாந்த் 2 மாநாடுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் பொது ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல் கொள்கைகள் மற்றும் முடிவுகள் பற்றி அறிவித்தார். அதன்பின் பொது முடக்கம் தொடங்கியதால் அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை.

    ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாலும் பொது முடக்கத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் ரஜினியின் அரசியல் இனி வேகம் எடுக்கும் என்று அவருக்கு நெருக்க மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:-

    ‘ரசிகர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக போஸ்டர் மூலமாக ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் இனி தன்னிச்சையாக யாரும் போஸ்டர் அடிக்க கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. அதே நேரம் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களும் இடப்பட்டன. அதில் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் முக்கிய செய்தி சொல்லப்பட்டது.

    கொரோனாவால் முடங்கி போயிருந்த ரஜினி விரைவில் வெளியில் வருவதோடு அரசியலிலும் தீவிரமாக இயங்க உள்ளார் என்பதே அந்த நல்ல தகவல். இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருப்பதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது.

    நவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி. ரஜினியின் தொடக்க கால திட்டமே கட்சி அறிவிப்பை பெரிய மாநாட்டில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதன் மூலம் களத்தில் இறங்கும்போதே பலமாக இறங்க திட்டமிட்டுள்ளார்.

    எனவே வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம்.

    ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை என்று சொல்லியதால் நிர்வாகிகள் சற்று உற்சாகம் குறைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தினால் தான் நவம்பர் மாநாட்டில் பெருந்திரளான கூட்டத்தை கூட்ட முடியும்.

    எனவே அவர்களை மாநாட்டுக்கு தயார்படுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடலாம். அப்போதே மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாகும். இதுதான் ரஜினியின் திட்டம்.

    கட்சியை இனி தான் தொடங்க வேண்டுமா? அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அது மாநாட்டில் ரஜினியின் அறிவிப்பில் தான் முடிவுக்கு வரும். முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.

    அப்படி போட்டியிட்டால் வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றாக அமையும். இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட களம் இறங்கலாம்.

    தேர்தலுக்கு முன்னதாக 2 மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளவர் ஒன்றை மதுரையிலும் இன்னொன்றை சென்னைக்கு அருகில் வேலூர் அல்லது திருவண்ணாமலையில் நடத்தவும் முடிவு செய்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா அல்லாத பிற கட்சிகள் வந்தால் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.

    கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தனக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கு, பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை என பல வகைகளில் ஆராய்ந்து கூட்டணிக்கான முடிவை எடுப்பார். அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தமிழக அரசியலின் முகமாக ரஜினி மாறப்போகிறார்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×