search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலமாக 35,000 மனுக்களுக்கு தீர்வு- எடப்பாடி பழனிசாமி

    முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலமாக 35,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதுவரை 19 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

    இதனையடுத்து 20-வது மாவட்டமாக இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த மாவட்டத்தில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    திருவண்ணாமலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் மிக சிறப்பு வாய்ந்ததாகும். கிரிவலம் செய்பவர்களுக்கு சாலை வசதி, நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி கொடுத்தது. மாவட்டத்தில் சாலை, பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிரிவலம் செல்பவர்கள் தங்கிச் செல்ல யாத்ரி நிவாஷ் திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது.

    மக்கள் அரசை தேடிச்சென்ற நிலை மாறி இன்று மக்களை தேடி அரசு சென்று அவர்களின் குறைகளை தீர்த்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலமாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 35,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேல் கூடுதலாக வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் விளைச்சல் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இந்த வருடம் அதிக அளவில் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

    திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×