search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    சென்னையில் ‘டாஸ்மாக்’ கடைகளில் காலை 9 மணி முதல் டோக்கன் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    சென்னையில் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கிர்லோஷ் குமார் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை போலீஸ் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 18-ந் தேதி (இன்று) முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை திறக்க அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன் மட்டுமே மது வாங்குவதற்காக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும். 6 அடி சமூக இடைவெளியை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். ஒரு நேரத்தில் கடையில் 5 வாடிக்கையாளர்களுக்கு மேல் நிற்க அனுமதிக்க கூடாது.

    வாடிக்கையாளர் கூட்டத்தை தவிர்ப்பதற்காக கூடுதல் பணியாளர்களை கடைகளில் நியமிக்க வேண்டும். பார்களை அனுமதிக்கக் கூடாது.

    பணியாளர் அனைவரும் மூன்றடுக்கு முககவசம், முக ஷீல்ட், கையுரைகள், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். 55 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களையும், பிற நோய்க்கு ஆட்பட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தக்கூடாது.

    கடையின் 2 கவுண்டர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை வரிசையில் நிறுத்த மரக்கட்டைகளை வைத்து ஒரு வரிசைக்கு ஏற்றார்போல் தடுப்புகள் வைக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை யாரும் பின்பற்றாவிட்டால் கடையை உடனே மூடிவிட வேண்டும்.

    200 அடி நீளத்தில் அமைக்கப்படும் வரிசையில், 6 அடி இடைவெளியில் வட்டம் வரையப்பட்டு வாடிக்கையாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். கடைக்கு வெளியே 2 பணியாளர் நின்று, வாடிக்கையாளரை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    வேலை நேரத்தில் குறைந்தபட்சம் 5 முறையாவது கடை சுத்தப்படுத்தப்பட வேண்டும். கடைகளுக்கு வெளியே பிளச்சிங் பவுடர் தினமும் 2 முறை தெளிக்கப்பட வேண்டும். கடையில் 500 பேருக்கும் மேலாக வந்துவிட்டால் அவர்களுக்கு மறு நாளுக்கான டோக்கனை நேரம் குறிப்பிட்டு அளிக்க வேண்டும். அந்த நேரத்தில் வந்து அவர்கள் மது வாங்கலாம். மக்கள் அதிகம் கூடும் கடைகளில் ஸ்பீக்கர் வைத்து பேசி கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 2 தனியார் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும்.

    முககவசம் அணியாத வாடிக்கையாளருக்கு டோக்கன் கிடையாது. காலை 9 மணிக்கே டோக்கனை வழங்கத் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×