search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு

    பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன. பல்கலைகழக மானியக்குழு இதுதொடர்பாக சில வழிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் பின்பற்ற அறிவுறுத்தியும் இருக்கிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு நடத்துவது இப்போது சாத்தியப்படுமா? அப்படி இருந்தால் எவ்வாறு தேர்வுகள் நடத்துவது? என்பது குறித்து ஆராய்ந்து முடிவுஎடுக்க, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழகஅரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயர்கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் நிலையில் இல்லை. செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில பல்கலைக்கழகங்கள் முடிவு எடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது.

    பல்கலைக்கழக மானியக்குழு வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கிறது. மேலும் இதுகுறித்து ஆராய உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

    இந்தக்குழுவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர், தமிழ் மேம்பாடு மற்றும் தகவல்துறை செயலாளர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கமிஷனர் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர்.

    பல்கலைக்கழக மானியக்குழு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்தக்குழு பரிந்துரைகளை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×