search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட கூலிப்படையினர்
    X
    கைது செய்யப்பட்ட கூலிப்படையினர்

    தொழில் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படையினர் 4 பேர் கைது

    தஞ்சை தொழில் அதிபர் கொலை வழக்கில் திருச்சியை சேர்ந்த கூலிப்படையினர் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தி, அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    கள்ளப்பெரம்பூர்:

    தஞ்சை விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் யூசுப். தொழில் அதிபரான இவரது மனைவி அசிலா. காதல் திருமணம் செய்த இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். இவர் தனது வங்கி லாக்கரில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை தனது மனைவி அபகரித்துக்கொண்டதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அசிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று யூசுப் தஞ்சையிலும், அசிலா தனது குழந்தைகளுடன் திருச்சியிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று யூசுப் தஞ்சை-திருச்சி சாலையில் வல்லம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் காரில் சென்றபோது படுகொலை செய்யப்பட்டார்.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சுகுமார் மற்றும் ஏட்டுகள், போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூசுப் மனைவி அசிலா, திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பிரகாஷ், திருச்சி மேக்குடியை சேர்ந்த சகாதேவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அசிலா திருச்சி பெண்கள் சிறையிலும், சகாதேவன், பிரகாஷ் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த பார்த்திபன், காசி என்கிற பாலமுருகன், பிள்ளையார்பட்டியை சேர்ந்த முருகேசன், நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருச்சியை சேர்ந்த கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று திருச்சி சென்ற தனிப்படை போலீசார், திருச்சி இ.பி ரோடு அண்ணா நகர் பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த குமார் மகன் கார்த்திக்(வயது 26), ஆறுமுகம் மகன் சந்துரு(21), ராமசந்திரன் மகன் ஆறுமுகம்(21), சுந்தரலிங்கம் மகன் கேசவன்(28) ஆகிய 4 பேரை பிடித்து கைது செய்தனர்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தி, ரத்தக்கறை படிந்த அரிவாள்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைதான கூலிப்படையினர் 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த கொலை வழக்கில் யூசுப் மனைவி அசிலா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர். 
    Next Story
    ×