search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? -மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

    தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது முடிவுக்கு கொண்டு வருவதா? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
    சென்னை:

    கொரோனா பரவலை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொது போக்குவரத்து தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

    இது ஒருபுறமிருக்க பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையை தொடங்கினார்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? அல்லது முடிவுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. 

    இந்த ஆலோசனையின்போது, கள நிலவரம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர் குழு விளக்கமாக தெரிவிக்க உள்ளது. அதன் அடிப்படையில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
    Next Story
    ×