search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    தொழில் அதிபர் கொலை வழக்கு- செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை

    தஞ்சையில் ஓட, ஓட விரட்டி தொழில் அதிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளப்பெரம்பூர்:

    தஞ்சை விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் தொழில் அதிபர் யூசுப். இவரது மனைவி பெயர் அசிலா என்கிற ரசியா. கிறிஸ்தவரான இவர், திருமணத்திற்கு பின்னர் முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது பெயரை யூசுப் என மாற்றிக்கொண்டார்.

    குவைத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு குவைத்தில் இருந்து திரும்பி ஊருக்கு வந்து தனது மனைவி, வங்கி லாக்கரில் இருந்த நகைகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் அபகரித்துக்கொண்டதாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அசிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் யூசுப் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது. யூசுப் தஞ்சையிலும், அசியா திருச்சியிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தஞ்சை-திருச்சி சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலத்தின் அருகில் யூசுப் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது யூசுப் ஓட்டிச்சென்ற காரை மர்ம நபர்கள் வழிமறித்து காருக்குள் வைத்து அவரை வெட்டி உள்ளனர். அவர்களிடம் இருந்து உயிர் தப்பிக்க யூசுப் காரில் இருந்து இறங்கி ஓடி உள்ளார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச்சென்று ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலைக்கான காரணம் என்ன? பல கோடி ரூபாய் மதிப்பிலான யூசுப்பின் சொத்தை அபகரிப்பதற்காக யாரேனும் கூலிப்படையை வைத்து அவரை கொலை செய்தனரா? அல்லது இந்த கொலைக்கு வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    யூசுப் கொலையை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள யூசுப் மனைவி அசிலாவை தனிப்படை போலீசார் வல்லம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த கொலையில் தனக்கு சம்மந்தம் இல்லை என அவர் கூறியதாக தெரிகிறது. ஆனாலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலை நடந்த இடத்தில் கிடைத்துள்ள தடயங்கள், யூசுப் பயன்படுத்தி வந்த செல்போன், அசிலாவின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல கொலை நடந்த வல்லம் புறவழிச்சாலை பாலத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×