search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பழனிசாமி
    X
    முதலமைச்சர் பழனிசாமி

    கொரோனா பாதிப்பு - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் உடல்நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் பழனிசாமி

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியிடம் அவரது உடல்நலம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்தது.  இதனை தடுக்கும் பணிகள், முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி


    இந்நிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியும் (வயது 61) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    பழனி, சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 156-வது வட்டத்துக்கு உட்பட்ட முகலிவாக்கம் மதனந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு இவர் கடந்த சில தினங்களாக நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். கடைசியாக கடந்த 10ந்தேதி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார்.

    எம்.எல்.ஏ. பழனிக்கு நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் எம்.எல்.ஏ. பழனிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பழனியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்றும், விரைவில் அவர் குணம் அடைவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பழனியின் மகன் செல்வத்திடம் முதல் அமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ பழனி மற்றும் அவரது மற்றொரு மகன் வினோத் ஆகியோரிடம் நலம் விசாரித்துள்ளார். அப்போது, தேவையான உதவிகளை செய்யுமாறு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்த முதல் அமைச்சரிடம், தாம் நலமுடன் இருப்பதாக பழனி கூறியுள்ளார்.
    Next Story
    ×