search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    திருமழிசை காய்கறி மார்க்கெட்டை மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்ற வியாபாரிகள் கோரிக்கை

    மழைக்காலத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டை சரிசெய்து, திருமழிசையில் இருந்து காய்கறி மார்க்கெட்டை மீண்டும் கோயம்பேட்டுக்கே மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    கொரோனா பாதிப்பை தடுக்க, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாறாக திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் வரத்து உள்ளது. தற்போது கர்நாடகாவில் பருவமழை காலம் தொடங்கி உள்ளது.

    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள திண்டுக்கல், நீலகிரி மாட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் காய்கறிகள் அழுகுவதை தடுக்க அதிக அளவில் அறுவடை செய்து விவசாயிகள் விற்பனைக்கு அனுப்ப தொடங்கி உள்ளனர்.

    இதனால் திருமழிசை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி தக்காளி ரூ. 10-க்கும், பெரிய வெங்காயம் ரூ. 10 முதல் ரூ. 14-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 25-க்கும், கத்தரிக்காய் ரூ. 20-க்கும், வெண்டைக்காய் ரூ. 20-க்கும், கேரட் ரூ. 20-க்கும், பீன்ஸ் ரூ. 40-க்கும், அவரைக்காய் ரூ. 30-க்கும் விற்கப்படுகிறது.

    பச்சை மிளகாய்-ரூ. 20, இஞ்சி-ரூ.70, முள்ளங்கி-ரூ.20, பீட்ரூட்-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.70, சேனைக்கிழங்கு-ரூ.30, சேப்பங்கிழங்கு-ரூ.30, காலிபிளவர்-ரூ.25, சவ்சவ்-ரூ.15, புடலைங்காய்- ரூ.15ஆகிய விலைகளில் விற்கப்பட்டது.

    வரத்து அதிகரிப்பால் கேரட் மற்றும் பீன்ஸ் விலை கடுமையாக குறைந்துள்ளது. இவை கிலோ ரூ. 90 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    திருமழிசையில் காய்கறிகளை வாங்கி செல்லும் வியாபாரிகள், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அவற்றை கூடுதல் விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விலை குறைவு பயனை அனுபவிக்க முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளனர்.

    100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் 10 அடி இடைவெளியில் 194 காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு ஒரு கடைக்கு 200 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் காவல்துறை சார்பில் 9 கண்காணிப்பு கோபுரங்களும், 3 சோதனை சாவடிகள் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    இந்த தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி தினமும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 10 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் காய்கறிகளை கடைகளில் இறக்கி வைக்கும் பணிகள் நடைபெறும். அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை வியாபாரிகள் நேரடியாக சந்தைக்கு வந்து, காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்கறிகளின் விலை உயர்ந்ததுடன், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மேலும் சிறிய அளவில் மழை பெய்தால் கூட காய்கறிகளை பாதுகாக்க இங்கு போதிய வசதி இல்லை. எனவே மழை பெய்யும் நேரங்களில் காய்கறிகள் அழுகி வீணாகும் நிலை ஏற்படும்.

    Next Story
    ×