search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்
    X
    பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

    பழைய இரும்பு குடோனில் தீவிபத்து- போலீசார் விசாரணை

    நெல்லை அருகே பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே தாழையூத்து மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் பின்புறம் பழைய இரும்பு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் பழைய டயர், டியூப்கள் மற்றும் இரும்பு பொருட்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் அங்கு திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்து கரும்புகை கிளம்பியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் அந்த பகுதியில் கரும்புகை கிளம்பியது. சுற்றியுள்ள முட்செடிகளில் தீ பிடித்து எரிந்தது.

    இதைத்தொடர்ந்து பேட்டை, கங்கைகொண்டான், நாங்குநேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வந்தது. அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

    மேலும் இந்தியா சிமெண்டு ஆலையில் இருந்து மீட்புக்குழுவினரும் வந்தனர். பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் உள்பட 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து நுரையின் மூலம் தீயணைக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானது. அவர்கள் மீண்டும் தண்ணீர் நிரப்பி தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களும் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரும்பு குடோன் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் தீ கட்டுக்குள் வந்தது. 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீ எப்படி பிடித்தது. மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×