search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா
    X
    பிரேமலதா

    கொலையுண்ட மாணவி குடும்பத்துக்கு ஊரடங்கை மீறி நிவாரணம்: பிரேமலதா, பா.ஜனதா தலைவர் மீது வழக்கு

    கொலையுண்ட மாணவி குடும்பத்துக்கு ஊரடங்கை மீறி நிவாரணம் வழங்கிய தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி ஜெயஸ்ரீ கடையில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் முருகையன், கலியபெருமாள் ஆகியோர் முன்விரோதத்தில் அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்தனர்.

    இது தொடர்பாக முருகையன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை திரு வெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வந்தார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் உள்பட 20 பேர் வந்திருந்தனர்.

    மாணவியின் குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாணவியை எரித்து கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றார்.

    தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறி கொரோனா வைரஸ் தொற்று பரவும் வகையில் கூட்டமாக சென்றதாக கூறி பிரேமலதா உள்பட 6 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மாணவி ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஊரடங்கு உத்தரவை மீறி கும்பலாக வந்ததாக கூறி முருகன் உள்பட 10 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×