search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    கொரோனா இல்லாத தமிழகம் உருவாக பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

    பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா இல்லாத தமிழகம் உருவாக ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை:

    மதுரையில் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அறவே ஒழிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கொரோனா வைரசை ஒழிப்பதிலும், நோய் தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வழங்குவதிலும் முதலமைச்சர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். கொரோனா ஒழிப்பில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக செயலாற்றி வருகிறது.

    மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி முக ராசிக்காரர், கைராசிக்காரர் என்று தமிழக மக்கள் நன்றி உணர்வோடு வாழ்த்துகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் விவசாய விளை பொருள்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    விவசாயிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழக மக்களை தன் பிள்ளைகளைப் போல எடப்பாடி பழனிசாமி நினைத்து அனைத்து வசதிகளையும் செய்து வருகிறார்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், விவசாய உற்பத்திகள் அனைத்தும் புள்ளி விவரங்களாக இருக்கின்றன. இதனை எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிந்து கொள்ளவேண்டும்,

    இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் அவரது அரசியல் அனுபவத்திற்கு உதவிகரமாக இருக்கும். முதல்வரின் சாதனைகளை எதிர்க்கட்சித்தலைவர் அறிந்துகொள்ளவேண்டும். அதை விட்டுவிட்டு தனது இருப்பை வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்வதற்காக தன் கட்சிகாரர்களிடமே பேசுகிறார். அதை செய்தியாக சொல்லுகிறார். அவரது அரசியல் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    தமிழக அரசு கொரோனா ஒழிப்பில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களும் அரசின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×