search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    4 நாட்கள் முழு ஊரடங்கு- கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்த வியாபாரிகள்

    முழு ஊரடங்கு நாளை முதல் 4 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் 7 ஆயிரம் மினி வேன்களில் வந்த வியாபாரிகள் காய்கறி வாங்கி சென்றனர்.
    சென்னை:

    முழு ஊரடங்கு நாளை முதல் 4 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிகளவில் காலையிலேயே குவிந்தனர். ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு கடந்த ஒரு மாதமாக இருந்து சுமார் 4 ஆயிரம் மினி வேன்கள் மற்றும் 5 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மளிகை கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இன்று வியாபாரிகளின் எண்ணிக்கை கோயம்பேட்டில் பல மடங்கு அதிகரித்து இருந்தது.

    இன்று காலையில் 7 ஆயிரம் மினி வேன்களில் வந்த வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கி சென்றனர். இது தவிர 10 ஆயிரம் மோட்டார் சைக்கிளில் வியாபாரிகள் காய்கறி வாங்கி குவிந்தனர்.

    இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க பொதுமக்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடை கடந்த சில நாட்களாகவே அமலில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மட்டுமே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பார்கள்.

    இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை இன்று அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்கிச்சென்றனர்.

    தினமும் தனது கடைக்கு 5 கிலோ அளவுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் மளிகை வியாபாரி ஒருவர் இன்று அதனை இருமடங்காக கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

    இப்படி கோயம்பேட்டில் வியாபாரிகள் அதிகளவில் இன்று கூடுவார்கள் என்பதை முன் கூட்டியே கணித்த போலீசார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மளிகை கடைகள் அனைத்திலும் இன்று காலையிலேயே கூட்டம் அலைமோதியது. புரசைவாக்கம், வேப்பேரி, கிண்டி, எழும்பூர், புதுப்பேட்டை, ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, மாதவரம் பால் பண்ணை, செங்குன்றம், பல்லாவரம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை, தாம்பரம், துரைப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே இன்று பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிக எண்ணிக்கையில் கூடினார்கள்.

    இதனால் பல இடங்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதனை கடைக்காரர்கள் கண்டித்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்குமாறு வியாபாரிகள் அறிவுறுத்தினர். பல இடங்களில் போலீசாரும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளையும் வெளியிட்டு மளிகை கடைகளை கண்காணித்தபடி இருந்தனர்.

    சமூக இடைவெளியை கடைபிடித்து அருகருகே நிற்காமல் பொருட்களை வாங்குமாறு போலீசாரும் பொதுமக்களிடம் கூறினர்.

    இதேபோன்று சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இன்று காலை அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மளிகை வியாபாரிகள் பலரும், பொதுமக்களும் அங்கு குவிந்திருந்தனர். சூப்பர் மார்க்கெட் வியாபாரிகள் அவர்களிடம் மளிகை பொருட்களுக்கான சீட்டுகளை வாங்கி பெயர் உள்ளிட்டவைகளையும் குறித்து வைத்தனர்.

    பின்னர் கடைகளுக்கு எதிரில் தனித்தனியாக நிற்குமாறு அறிவுறுத்தி பொருட்களை எடுத்து முடித்த பின்னர் வரவழைத்து வழங்கினார்கள்.

    சென்னையை பொருத்தவரையில் முழு ஊரடங்கை நாளை முதல் முழுமையாக அமல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதற்கான உத்தரவு நேற்று இரவே பிறப்பிக்கப்பட்டன. சென்னை மாநகர் முழுவதும் 12 ஆயிரம் போலீசார் இன்று முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காய்கறி சந்தை மற்றும் மளிகை கடைகள் இருக்கும் பகுதிகளில் இன்று அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதேபோன்று சென்னையையொட்டி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்துக்கு உட்பட்ட இடங்களிலும் 3 மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதன் மூலம் சென்னை, புறநகர் பகுதிகளையும் சேர்ந்து 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    திருப்பூர், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் 28-ந்தேதி வரையில் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த 2 மாநகராட்சிகளிலும் 3 நாட்கள் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட உள்ளது. அங்கும் இதுபோன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×