search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

    கொரோனா வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? என்று விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தேசிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பால், உணவு, காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வோர் தினமும் பலரிடம் வியாபாரம் செய்வதால், இவர்கள் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்று பரவி விடக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த்பாண்டியன், சிறப்பு அரசு பிளடர் ஏ.என்.தம்பிதுரை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.510 கோடியை மட்டும் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி போதுமானதாக இருக்காது. கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    குறிப்பாக மராட்டிய மாநிலத்துக்கு ரூ.1,611 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ.966 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ. 910 கோடியும், ஒடிசாவுக்கு ரூ. 802 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.740 கோடியும், பீகாருக்கு ரூ. 708 கோடியும், குஜராத்துக்கு ரூ. 662 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஆனால் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாக உள்ள தமிழகத்துக்கு வடமாநிலங்களை விட குறைவான நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே 2-ம் இடத்தில் உள்ள தமிழகத்துக்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை? என்பதற்கு மத்திய அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

    மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்களும் தாமாகவே முன்வந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு முன்வர தவறினால் கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசியமில்லாமல் வாகனங்களில் பலர் வீதி உலா வருகின்றனர். அப்படிப்பட்ட நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், ஓட்டுநர் உரிமத்தையும் இடைநீக்கம் செய்ய வேண்டும்.

    அதற்கு முன்பாக, தேவைப்பட்டால் அந்த நபர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் விசாரித்து உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அதேபோல ஒவ்வொரு பிரச்சினைக்கும் பிரதமரையும், முதல்-அமைச்சரையும் பேச வரச்சொல்வது போல சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் ஏற்க முடியாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×