search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் தோட்டத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருக்கும் வடமாநில பனியன் தொழிலாளர்கள்.
    X
    திருப்பூர் தோட்டத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருக்கும் வடமாநில பனியன் தொழிலாளர்கள்.

    ஊரடங்கு உத்தரவு எதிரொலி - திருப்பூரில் லட்சக்கணக்கான பனியன் தொழிலாளர்கள் வேலை இழப்பு

    ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பூரில் லட்சக்கணக்கான பனியன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1,050 கோடிக்கு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    சீனாவில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று பல்வேறு நாடுகளுக்குள்ளும் பரவி மனித இனத்தையே படாத பாடு படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் தங்களால் ஆன பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் மனிதர்கள் தனித்தும், விலகியும் இருந்தால் கொரோனாவால் ஒன்றும் செய்ய முடியாது என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மத்திய அரசு வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

    இந்த ஊரடங்கால் டாலர் சிட்டி என்று அனைவராலும் அழைக்கப்படும் திருப்பூர் மாநகரம் தொழிலாளர்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி கிடக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. இங்கு இருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும், அது சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களும் ஊரடங்கால் மூடப்பட்டு விட்டன.

    வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்கள். ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியானதுமே பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூரில் தங்கி வேலைபார்த்த தொழிலாளர்கள் அனைவரும் பஸ், கார், வேன் என பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஆனால் ரெயில் சேவை இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலேயே தங்கி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு ஒருபுறமிருந்தாலும், அவர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படும் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சமூக ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கான உணவுத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகின்றனர்.

    மேலும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்தும் வழங்க வேண்டும் என பனியன் நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

    இருப்பினும் தொழிலாளர்களின் உணவு பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதே நிலை நீடித்தால் திருப்பூருக்கு வேலைக்கு வருகிற தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. 

    எனவே அனைத்து தொழில்துறையினரும் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உணவின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக 

    ஆர்வலர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

    பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரில்தான் இருப்பார்கள். எனவே தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவார்கள். 

    தற்போதைய சூழ்நிலையில் வேலை இல்லாத காரணத்தால் பணம் தங்கள் கையில் இல்லாமல் உணவு உள்ளிட்ட அடிப்படை செலவுகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு பின்னலாடை வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த வாரத்தில் இருந்து பனியன் நிறுவனங்கள் இயங்கவில்லை. இதன் காரணமாக அதிகளவு அன்னிய செலாவணி ஈட்டித்தரும் பின்னலாடை வர்த்தகம் தற்போது வரை ரூ.1,050 கோடிக்கு உள்நாடு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் கவலையடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஐ.பி.எல். போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தேவையான உடைகள் தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் 

    கடும் சிரமத்தை சந்தித்துள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வந்த தொழில்துறையினர், தற்போது இந்த பிரச்சினையிலும் சிக்கி தவிக்கிறார்கள். இதில் இருந்து மீண்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை தொழில் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×