search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

    ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் 110-வது வீதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மக்களால் “மக்களின் தந்தை” என போற்றப்படுபவரான ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

    அச்சமயம் தூத்துக்குடி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள அன்னாரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    நம் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நமது மாநிலம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும், மணிமண்டபங்கள், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை அம்மாவின் அரசு உருவாக்கி, பராமரித்து வருகிறது.

    வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல், மகனாகவும் நினைத்துப் போற்றிய, திருநெல்வேலி சீமை தந்த தீரம் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவன். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.

    பணிக்காலத்தில் பத்திகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக 1.8.2018 அன்று முதல் உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டேன். இம்மருத்துவ நிதி உதவி 2 லட்சம் ரூபாயாக தற்போது உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளைய தேவனுக்கு வெண்கல சிலை அமைக்கவும், குரூஸ் பர்ணாந்தீஸ் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் அறிவிப்பு வெளியிட்டதற்காக முதல்- அமைச்சருக்கு கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×