search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவண்ணாமலையில் இளம்பெண் மர்ம மரணம்- கணவர் கைது

    திருவண்ணாமலையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே எர்ணாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது27). இவருக்கும் அத்திமூர் கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரின் மகள் சிவரஞ்சினி (22) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி திருமணம் நடந்தது.

    சிவரஞ்சினிக்கு அவரது கணவரும், மாமனார் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சிவரஞ்சினி கடந்த 18-ந் தேதி இரவு மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவரஞ்சினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பாபு கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆரணி உதவி கலெக்டர் மைதிலியும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று சிவரஞ்சினியின் சாவிற்கு காரணமான அவரது கணவர் மற்றும் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் கூறி சிவரஞ்சினியின் உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை கைது செய்தால்தான் சிவரஞ்சினியின் உடலை வாங்குவோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து சாலையோரத்துக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கு போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையில் கலசபாக்கம் போலீசார் சிவரஞ்சினியின் கணவர் ஜெயபாலை கைது செய்தனர். இந்த தகவலை துணை போலீஸ் சூப்பிரண்டு அவர்களிடம் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து சிவரஞ்சினியின் உடலை அவர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×