search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்

    மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதை முன்னிட்டு திண்டுக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி 11-வது மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா திண்டுக்கல் அருகில் உள்ள ஒடுக்கம் பகுதியில் நாளை (14-ந் தேதி) நடக்கிறது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்தது.

    இந்த இடத்தில் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா நாளை நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், விஜயபாஸ்கர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்காக ஒடுக்கம் பகுதியில் விழா மேடை, பார்வையாளர்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    விழாவிற்கு வரும் அனைவருக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விழா மேடை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கண்காணப்பு கேமிராக்கள் பொருத்தும் இடம், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் பாதையில் இடையூறு ஏற்படுத்தாமல் பாதை அமைக்கும் பணி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் மண் கொட்டப்பட்டு மேடாக்கி சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேடை அருகே 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் முன்னிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    இன்று முதல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்லில் இருந்து ஒடுக்கம் பகுதிக்கு நத்தம் சாலையில் நல்லாம்பட்டி வழியாகவும், வேடபட்டி வழியாகவும்தான் செல்ல முடியும். தற்போது இந்த 2 வழித்தடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். விழா நடக்கும் சமயத்தில் இந்த பாதையில் வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படும்.

    பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்-அமைச்சர் பேசும் மேடைக்கு எதிராக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    விழாவில் கலந்து கொள்ளும் நபர்கள் பயன்படுத்துவதற்காக மொபைல் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் சாதனை விளக்க புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நுழைவு வாயிலில் வாழை மரங்கள், மாவிலை தோரணம் அமைக்கப்பட்டு முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்க தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏ.வெள்ளோட்டில் இருந்து விழா நடத்தும் மேடை வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் பாதை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு பளிச்சென்று காணப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மருத்துவக்கல்லூரி திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இதனால் மாவட்டத்தின் சார்பில் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். எனவே நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
    Next Story
    ×