search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    க அன்பழகன்
    X
    க அன்பழகன்

    சட்டசபையில் அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

    மறைந்த எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கு தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது.

    அதைத் தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் செய்வதற்காக சட்டசபையின் 2-வது அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சட்டசபை இன்று காலை கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சபைக்கு வந்து இருந்தனர்.

    சரியாக 10 மணிக்கு சபாநாயகர் தனபால் வந்தார். அதை தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரனின் இரங்கல் குறிப்பு, மறைந்த எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் ஆகியவற்றை சபாநாயகர் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன் (பெரணமல்லூர் தொகுதி) 1977 முதல் 1980 வரை பெரணமல்லூர் சட்டசபை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கடந்த 29.2.2020 அன்று மரணம் அடைந்தார். அவருக்கு இந்த சபை இரங்கல் தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மறைந்த எம்.எல். ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கே.பி.பி.சாமி திருவொற்றியூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். 2016-ல் மீண்டும் இதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்றவர். சட்டசபையில் திறமையாக வாதிடுவார். இவர் கடந்த 27.2.2020 அன்று மரணம் அடைந்த செய்தி அறிந்து பேரவை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயரமும் அடைகிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை சபை தெரிவித்துக் கொள்கிறது.

    குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காத்தவராயன் கடந்த ஆண்டு இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழகுவதற்கு எளிமையானவர், இனிய பண்பாளர். அவர் 28.2.2020 அன்று மறைந்த செய்தி அறிந்து சபை அதிர்ச்சியும் ஆற்றொண்ணா துயரமும் அடைகிறது என்றார். இவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் சில நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    அன்பழகன் பற்றிய இரங்கல் தீர்மானம் வருமாறு:-

    முன்னாள் அமைச்சர் மற்றும் அவை முன்னவராக இருந்த கே.அன்பழகன் திராவிட இயக்க கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தந்தை பெரியார், எம்ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி ஆகியோரோடு பயணித்தவர் பகுத்தறிவு கொள்கையில் சிறிதும் பிறளாமல் சமூகநீதி, மொழி உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.

    1957-ம் ஆண்டு முதல் 2011 வரை 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1962 முதல் 1967 வரை மேலவை உறுப்பினராகவும், 1967 முதல் 71 வரை திருச்செங்கோடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகவும், சட்டசபைப் பேரவை முன்னவராகவும் மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர்.

    தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றிய பேராசிரியர் அன்பழகன் கடந்த 7-ந்தேதி மறைவுற்ற செய்தியை அறிந்து பேரவை அதிர்ச்சியும், ஆற்றொண்ணாதுயரமும் கொள்கிறது.

    தமிழ்ப்பற்று கொண்ட பேராசிரியர் அன்பழகன், எளிமை, அடக்கம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர். கல்லூரி பேராசிரியராக தனது பணியை தொடங்கி தமிழர் வாழ்வு, தமிழ் மொழி இலக்கியம் பண்பாடு என பல்வேறு துறைகளில் ஆழ்ந்து கற்று பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

    அமைச்சராக, பேரவை முனனவராக தனது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்கும் வண்ணம் தெரிவித்து ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உறுதுணையாக இருந்தவர். அவரது திறமை அவரோடு பணிபுரிந்த அனைவரும் அறிந்தது.

    சபையில் விவாதங்கள் திசைமாறி சென்றபோதும் அதை சிறப்பாக கையாண்டவர். பேராசிரியர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 மணிதுளிகள் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் எழுந்து நின்று அனுதாபம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. நாளை சட்டசபைக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை சட்டசபை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
    Next Story
    ×