search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

    சிவகாசியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சும், செயல்பாடுகளும் பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அதன் கொடூர அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல்போக்கு குறித்த செய்தியை வெளியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையின் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்த கொலைவெறி தாக்குதலுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கமாக நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பிறகு குளிர்பதன பெட்டியில் அடைத்து வைக்கும் தந்திரத்தை இந்த நிகழ்விலாவது கைவிட வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன்.

    எப்போது யாரைப்பற்றி பேசினாலும் “அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன்” என்று அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாக கொக்கரித்து வரும் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் அமைதி காப்பது ஏன்?.

    இந்த முற்றிப்போன நிலையிலாவது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும், பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோன்று, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதி தமிழன், சென்னை நிருபர்கள் சங்கத்தலைவர் ஆர்.ரங்கராஜ், சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×