search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன்
    X
    வானதி சீனிவாசன்

    இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல- வானதி சீனிவாசன்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்வதாகவும், பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு இந்த சட்டத்தின் மூலம் மறுவாழ்வு கிடைக்கும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    சென்னை: 

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பா.ஜனதா கூறி வருகிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    * இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ)

    * தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)

    * தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்)

    முதலில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துடன் மற்ற இரண்டையும் இணைத்து பார்க்க கூடாது. ஏனெனில் என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய இரண்டையும் கொண்டு வருவது பற்றி அதிகாரப்பூர்வமாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த சட்டங்களை கொண்டு வருவது எப்படி என்பது பற்றி மாநில அரசுகளிடம் கருத்துக்களை கேட்டுவருகிறது.

    மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்ட பிறகு அதுபற்றி பரிசீலித்து அதன்பிறகுதான் அதை எப்படி கொண்டுவருவது என்றே யோசிப்பார்கள். அதற்குள் யூகத்தின் அடிப்படையில் அதுபற்றி கருத்துக்களை சொல்வது சரியாக இருக்காது.

    இனி, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு வருவோம், இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் இந்திய குடிமக்களாகவே இருக்கிறார்கள்.

    மேலும் இந்த சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டமே தவிர குடியுரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையர்களான சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் ஆகியோர் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிருக்கு பயந்து இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக அகதிகளாக அல்லல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் வகை செய்கிறது. எதிர்க்கட்சியினர் சொல்வது போல் இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றோ அல்லது இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றோ எந்த ‌ஷரத்தும் இல்லை.

    பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும். அவர்களும் நம் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட குடிமகன்களாக மாறுவார்கள்.

    இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று மக்களை தவறாக திசை திருப்பி விடுவதுதான் வேதனை. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டை சேர்ந்த, எந்த மதத்தவர் ஆனாலும் இந்தியாவில் வாழ்ந்து காலம் காலமாக அமலில் இருக்கும் இந்திய குடியுரிமை சட்டப்படி குடியுரிமை கோர முடியும். அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்படும்.

    உதாரணமாக அன்னைதெரசா, சோனியா போன்றவர்கள் கூட அப்படித்தான் குடியுரிமை பெற்றார்கள். இப்போதும் பலருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான நடைமுறை. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இதை மத்திய உள்துறை அமைச்சகமும் பல இடங்களில் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறது. ஆனால் தவறான தகவல்களையும், யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். மக்கள் உண்மையை புரியும் போது ஏற்றுக்கொள்வார்கள்.

    இப்போது அரசியலுக்காகவும், மோடியை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்படும் இந்த தவறான வழிகாட்டுதல்கள் நீண்ட நாள் எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×