search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணை கேட்ட தி.மு.க. மனு ஏற்பு

    ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக சி.பிஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மருதுகணேஷ் அளித்த மனுவை கோர்ட் ஏற்றுக் கொண்டது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் எம்.எல். ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    அப்போது அ.தி.மு.க., இரண்டாக பிரிந்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனனும். சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர்.

    இதற்கிடையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை திடீரென சோதனை நடத்தி, இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஓட்டு போட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கின. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தவர்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 12 அமைச்சர்கள் பெயர் விவரம் அதில் இருந்தது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை ஆணையர் கடிதம் எழுதினார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த தேர்தலின்போது பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தேர்தலுக்காக பெரும் தொகை செலவு செய்துள்ளதால், அந்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக் கேட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா விசாரித்து கடந்த 23-ந்தேதி தீர்ப்புக்காக தள்ளி வைத்தனர்.

    இந்த நிலையில் இந்த இடைக்கால உத்தரவை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில் ‘பணப் பட்டுவாடா குறித்து முதல்- அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சி.பிஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மருதுகணேஷ் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    அதே நேரம், இழப்பீடு கேட்டுக்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×