search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு
    X
    செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு

    செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு

    ஜூன் மாதம் முதல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுகிறது.

    2011-ம் ஆண்டு கணக்கெடுப்புக்கு பின்னர் 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் கோடைக் காலம் முடிந்த பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஜூலை 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக அடிப்படையான தகவலை பெறும்வகையில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதனையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒருவர்கூட விடுபடக்கூடாது என்பதற்காக வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், காலி இடங்கள் என அனைத்தும் இந்த முதல்கட்ட கணக்கெடுப்பில் கொண்டு வரப்படும்.

    பூமியில் உள்ள அனைத்து கட்டமைப்புகளும் இதன் கீழ் கொண்டு வரப்படும். முதல்கட்டமாக நடக்கும் கணக்கெடுப்பின் போது 34 கேள்விகள் கேட்கப்படும்.

    ஒருவீட்டில் எத்தனைபேர், அறை, கழிப்பிட வசதி, கழிவுநீர் வசதி உள்ளதா?, கார், இண்டர்நெட் வசதி உள்ளதா என பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெறும்.

    2-வது கட்ட மக்கள் தொகை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த கணக்கெடுப்பு நடைபெறும். இதில் 28 கேள்விகள் கேட்கப்படும்.

    குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா?, குழந்தைகள், இடம் பெயர்ந்தவரா?, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவரா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும்.

    இதுவரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காகித முறையில் நடைபெற்று வந்தது. இந்த முறை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

    மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கான செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தகவல்களை பதிவு செய்வார்கள். தவறுகள் நடைபெறாமல் புள்ளி விவரங்கள் சேகரிக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.

    செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள் காகித முறையை பின்பற்றலாம். செல்போன் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள் நேரடியாக ‘சர்வருக்கு’ சென்றுவிடும். தாமதம் ஏற்படாமல் விரைவாக கணக்கெடுப்பை முடிக்க இது உதவும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.

    பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அதனை வெளியிடுவதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வருடத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ‘ஜூன் மாதத்தில்’ தொடங்குவதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியிடப்படும். அதன் பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது.

    Next Story
    ×