search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உச்சிப்புளியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது

    ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றின் அருகில் சிலர் தகராறில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் ஜெயபாண்டி (வயது 35), நந்தகுமார் (38) ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். போதையில் இருந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததோடு போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து நைசாக நழுவி சென்ற ஒரு வாலிபர் ரோட்டின் மற்றொரு பகுதியில் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து விசாரணை நடத்திக்கொண்டிருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது சரமாரியாக தாக்கினார்.

    திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் 2 பேரும் நிலை குலைந்தனர். மற்ற 2 வாலிபர்களும் கீழே கிடந்த கல் மற்றும் கட்டையால் தாக்கினர். 3 பேரின் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, நந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த 2 சப்- இன்ஸ்பெக்டர்களையும் அப்பகுதியினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அங்கு விரைந்து வந்து ஆறுதல் கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டிவி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சப்- இன்ஸ்பெக்டர்களை தாக்கிய வெள்ளைமாசி வலசை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (24) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×