search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    உலக வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்கும் சென்னை மாநகராட்சி

    புதிய திட்டங்களை செயல்படுத்த உலக வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்டு திட்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி சமர்ப்பித்துள்ளது.
    • சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • 17 இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் 7 இடங்களில் பாலங்கள் கட்டவும் ரூ.3725 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை முழுவதும் இணைப்பு சாலைகள் திட்டத்துக்காக ரூ.250 கோடியில் புதிய திட்டம்.
    • ‘மல்டி லெவல்’ கார் பார்க்கிங் திட்டத்துக்காக ரூ.2500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் பாண்டிபஜாரில் நவீன வசதிகளுடன் கூடிய திறன்மிகு நடைபாதை வளாகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இங்கு சாலையின் இருபுறமும் நடைபாதை வளாகத்தில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைள், 14 இடங்களில் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உலக வங்கி நிதி பெற்று சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாண்டி பஜார் போல 10 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகங்கள் அமைக்கவும், மெகா சாலைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    குறிப்பாக சோளிங்க நல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர், அண்ணாநகர், திருவொற்றியூர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் 100 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெகா சாலைகள்’ அமைக்கப்பட உள்ளது. இதேபோல் மாநகரின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 17 இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் 7 இடங்களில் பாலங்கள் கட்டவும் ரூ.3725 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை முழுவதும் இணைப்பு சாலைகள் திட்டத்துக்காக ரூ.250 கோடியில் புதிய திட்டம், ‘மல்டி லெவல்’ கார் பார்க்கிங் திட்டத்துக்காக ரூ.2500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை சேகரிப்பு மையங்களில் ‘பயோ மைனிங்’ முறையில் மேம்பாடு செய்ய ரூ.1338 கோடியில் புதிய திட்டம் உள்ளது.

    இதுபோன்ற மேலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தவும் உலக வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி நிதி கேட்டு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் அதிகாரிகளுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தி உள்ளார். நிதி கிடைக்கும் பட்சத்தில் திட்டப்பணிகளை உடனடியாக தொடங்குவதற்கு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
    Next Story
    ×