search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து விட்டன- கே.எஸ்.அழகிரி

    இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளில் 13 சதவீதம் தமிழகத்தில் நடப்பதாகவும் காவல் நிலைய சிறை கைதுகளில் 12 பேர் இறந்திருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே நல்லாட்சி நடத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய பா.ஜ.க. அரசின் பணியாளர் நலத்துறை சமீபத்தில் நற்சான்றிதழ் வழங்கியது. அத்தகைய நன் சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதற்கு 2018-ம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    2018-ம் ஆண்டிற்கான தற்கொலை நிகழ்வுகளில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக 3034, குடும்ப பிரச்சினைகள் காரணமாக 6433 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மொத்த தற்கொலைகளில் 10.3 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. அதேபோல, குடும்ப தற்கொலைகளிலும் தமிழகம் முன்னிலைப் பங்கு வகிக்கிறது.

    தமிழ்நாடு அரசு அதிகாரிகளில் 173 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வதில் 10.8 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 3162 பேர் தற்கொலை செய்துகொண்ட முதன்மை மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இத்தகைய தற்கொலைகளில் 13 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. காவல் நிலைய சிறை கைதுகளில் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

    தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பொது சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 2241 பேர் அதிகபட்சமாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய புள்ளி விவரங்களைப் பார்க்கிற போது, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எத்தகைய சீர்குலைவான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு உரிய புள்ளி விவரங்களோடு மத்திய அரசின் குற்ற ஆவண காப்பகம் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

    பாஜக

    இந்தப் பின்னணியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நல்லாட்சி நடைபெறுகிறது என்று மத்திய பா.ஜ.க. அரசு நற்சான்றிதழ் வழங்குவதை விட கேலிக்கூத்தானது வேறு எதுவும் இருக்க முடியாது.

    குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் கருத்துரிமைக்காக போராடுகிற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இத்தகைய மத்திய பா.ஜ.க. அரசு தான் இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

    இந்த நற்சான்றிதழை, மத்திய அரசின் நிறுவனமான தேசிய குற்ற ஆவண காப்பகமே உண்மையை வெளிப்படுத்தி அம்பலமாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க தவறிய அ.தி.மு.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×