search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    சென்னையில் அனைத்து பகுதிக்கும் மெட்ரோ குடிதண்ணீர் சப்ளை

    கிருஷ்ணா நீர் வருகையால் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சமமான அளவு குடிநீர் அனுப்ப மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து கல்குவாரி நீர், விவசாய கிணற்று தண்ணீர் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீரை கொண்டு வந்து குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டது.

    இதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தண்ணீர் தட்டுப்பாடு சீரானது. 650 மில்லியன் கனஅடி தண்ணீர் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வந்த தண்ணீர் 4 ஆயிரம் நடையாக குறைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 12 ஆயிரத்து 300 நடை வினியோகிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் பருவ மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. பூண்டி ஏரிக்கு தொடர்ந்து 586 கனஅடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்கிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 840 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்த இருப்பு 11 ஆயிரத்து 257 மி.கனஅடி).

    சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கடைசி வீடுகள் வரை முழுவதும் சமமான அளவு குடிநீர் அனுப்ப மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் ஆவடி, பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ வாட்டர் சப்ளை செய்ய பல்வேறு குடிநீர் ஆதாரங்களை இப்போதே தயார் செய்யத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறும்போது, ‘நகரின் கடைசி பகுதியில் உள்ள வீடுகள் வரை மெட்ரோ வாட்டரை சமமான அளவு வினியோகிக்க முடிவு செய்து உள்ளோம். கிருஷ்ணா நீர் வருகையால் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது.

    இதுவரை 4 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்துள்ளது. இது 5 மாதத்துக்கு சப்ளை செய்ய தேவையான நீர் ஆகும், எனவே இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி நீண்ட நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்’ என்றனர்.

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீரை பிப்ரவரி மாதம் கடைசி வரை வினியோகிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2011-12-ம் ஆண்டு 2 தவணைகளில் 8,198 மி.கனஅடி கிருஷ்ணா நீர் கிடைத்தது. இதன் பின்னர் தற்போது தான் அதிகபட்சமாக 4 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×