search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    தமிழக மக்கள் மதசார்பற்ற கூட்டணி பக்கம் இருக்கிறார்கள் - வைகோ

    தமிழக மக்கள் சக்தி தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நிரூபித்திருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளுங்கட்சியினரின் அடாவடிகள், அதிகார அத்துமீறல்கள், அரசு எந்திரத்தின் பாரபட்சமான அணுகுமுறை இவற்றின் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அரசு களத்துக்கு வந்தது. மலையளவு வெள்ளிக்காசுகள் அள்ளி வீசப்பட்டன. ஆனால் இவை அனைத்தையும் எதிர்கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

    எளிய மக்களுக்கும், விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தை வழங்கும் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த தமிழக அரசு முன் வராவிட்டாலும், தமிழக மக்கள் சக்தி தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நிரூபித்திருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.

    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், 9 மாவட்டத்துக்கான உள்ளாட்சி தேர்தல்களிலும் இந்த மாபெரும் வெற்றி தொடரட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×