search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிர்வேலன்
    X
    கதிர்வேலன்

    கள்ளிக்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி

    கள்ளிக்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலியானதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட குராயூரை அடுத்துள்ள கேசவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கூலி தொழிலாளி. இவரது மனைவி துர்காதேவி. இவர்களது மகன் கதிர்வேலன் (வயது 6).

    இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில வாரமாக கதிர்வேலனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கதிர்வேலனை சேர்த்தனர். அங்கு அவனது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தனி வார்டில் டாக்டர்கள் குழுவினர் கதிர்வேலனுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று இரவு சிறுவனின் உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை கதிர்வேலன் பரிதாபமாக இறந்தான்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த ஆத்தங்கரை (47) என்ற பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். தற்போது கதிர்வேலனும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளான். இதனால் அந்த கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் சிறுவன் இறந்த செய்தி அறிந்த கேசவநத்தம் கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×